ஈரோட்டில் துணிகரம்: ஜவுளி வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டில் நகை-பணத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு கனிராவுத்தர்குளம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 54). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூருவில் பி.காம். படித்து வருகிறார். 2-வது மகன் திண்டலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
பாலமுரளி ஜவுளி வியாபாரம் தொடர்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சென்று விட்டார். சாந்தி நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, 2-வது மகனுடன் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை சாந்தி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி சொம்பு, வெள்ளி தட்டையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story