உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2019 3:30 AM IST (Updated: 18 Nov 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் பகுதியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் பாசறை பயிற்சி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தென்காசி தொகுதி எம்.பி.தனுஷ்குமார் வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. இளைஞரணியில் 30 லட்சம் இளைஞர்களை இணைப்பது என்ற ஒற்றை இலக்கில் பயணம் செய்து வருகிறோம். தற்போது இலக்கில் 50 சதவீதத்தை நிறைவு செய்து விட்டோம்.

தற்போது வரை 15 லட்சம் இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா இந்தியை ஆட்சி மொழியாக மாற்றுவோம் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்.

இதற்கு தமிழக கவர்னர், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை அழைத்து பேசி, போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதில் இருந்தே அடுத்த ஆட்சி தி.மு.க. அடுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் நடைபெறுகின்ற தவறுகளை சுட்டி காட்டுவதோடு, அதனை எதிர்த்து களம் காணும் ஒரே இயக்கம் தி.மு.க. கடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் கட்சியினர் இடையே இணக்கமான சூழல் இல்லாததே என பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதத்தில் கடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சில அறிவுரைகளை எடுத்துரைத்தார். அதனை நாம் அனைவரும் பின்பற்றி எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று தி.மு.க. தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம்.

அனைவரும் இணைந்து தி.மு.க.வுக்காக பணியாற்றுவோம். இளைஞர்களிடம் ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும், இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கூட்டம் நடைபெறும்முன் மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதியின் உருவபடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story