திருமுல்லைவாசலில், தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு


திருமுல்லைவாசலில், தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 4:15 AM IST (Updated: 18 Nov 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாசலில் தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சீர்காழி, 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான நாகை மாவட்டத்தில் நீண்ட நெடிய கடற்கரையை கொண்ட சட்டசபை தொகுதியாக சீர்காழி தொகுதி உள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் இயற்கையாகவே துறைமுகம் அமைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். இங்கு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 250-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலமாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை திருமுல்லைவாசல் துறைமுகத்தில்தான் நிறுத்தி வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கடல் முகத்துவாரத்தில் அடிக்கடி உருவான மணல் மேடுகளால் படகுகளை சீராக இயக்க முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வந்தனர். அவ்வப்போது விசைப்படகுகள் விபத்துக்குள்ளாகி வந்தன.

இதையடுத்து முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாவதை தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி முகத்துவாரத்தின் இருபுறங்களிலும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. ஆனால் தூண்டில் வளைவுகள் முறையாக அமைக்கப்படாததால் தற்போது முகத்துவாரத்தில் மீண்டும் மணல் திட்டுகள் உருவாகி வருகின்றன.

இதன் காரணமாக திருமுல்லைவாசல் துறைமுகத்தில் இருந்து முகத்துவாரம் வழியாக விசைப்படகுகளை கடலுக்குள் எடுத்து செல்ல முடியவில்லை என மீனவர்கள் கூறுகிறார்கள். மணல் திட்டுகள் உருவாகி இருப்பதால் கடந்த 1 மாதமாக பெரும்பாலான விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தூண்டில் வளைவுகள் முறையாக அமைக்கப்படாததால் திருமுல்லைவாசல் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகள், சாலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூண்டில் வளைவுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும், முகத்துவாரத்தில் உள்ள மணல் மேடுகளை அகற்ற வேண்டும் என்றும் மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story