திண்டிவனம் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - 32 செல்போன்கள் மீட்பு


திண்டிவனம் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - 32 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 10:15 PM GMT)

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 செல்போன்கள் மீட்கப்பட்டது.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள அண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி நளினி(வயது 35). இவர் அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நளினி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டில் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்து 500 மற்றும் 3 செல்போன்களை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் யாரோ பணம் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் நளினி திருடுபோன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தன்னிடம் உங்களுக்கு சொந்தமான 3 செல்போன்கள் உள்ளது. ரூ.7 ஆயிரம் கொடுத்தால், அவற்றை உங்களிடம் கொடுத்து விடுவேன் என்று பேரம் பேசியுள்ளார். அதற்கு நளினி, ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதனை ஏற்ற அந்த நபர் இரவு நேரத்தில், தான் வரச்சொல்லும் இடத்துக்கு தனியாக வந்து பணத்தை கொடுத்து விட்டு, செல்போன்களை பெற்றுச் செல்லுமாறு கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி நளினி, ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மயிலம் செந்தில்குமார், ஒலக்கூர் ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நளினி வீட்டில் பணம் மற்றும் செல்போன்களை திருடியது, அதே ஊரைச் சேர்ந்த அய்யனார்(32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து நொளம்பூர் கிராமத்தில் பதுங்கியிருந்த அய்யனாரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நளினி வீட்டில் மட்டுமின்றி திண்டிவனம் பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், திருடிய பொருட்களை வேட்டவலம் அடுத்த ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த சுதாகர்(28) என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார், சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அய்யனாரிடம் இருந்து 32 செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி மீட்கப்பட்டது. கைதான அய்யனார் மீது மரக்காணம், புதுச்சேரி மற்றும் கடலூரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story