குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2019 4:45 AM IST (Updated: 22 Nov 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீனவர் தின விழாவில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குளச்சல்,

உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். குளச்சல் பங்குதந்தை மரிய செல்வம் வரவேற்றார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் ஸ்டீபன் தொடக்க உரையாற்றினார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, வசந்தகுமார் எம்.பி., கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலாரியூஸ், தமிழக மீன்வளத்துறை இயக்குனர் சமீரான், மீனவர் கூட்டுறவு மாநில இணைய தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ரூ.1000 கோடி ஒதுக்கீடு

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் கூறியதாவது:-

மீனவர்கள் துணிச்சல் மற்றும் வீரம் மிக்கவர்கள். அ.தி.மு.க. அரசு மீனவர் ஒருவருக்கு வருடத்திற்கு 19 ஆயிரம் ரூபாய் வரை நிவாரண நிதி வழங்கி வருகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2016-க்கு பிறகு பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதியில் 50 சதவீதம் குமரி மாவட்டத்துக்கு வழங்கப்படுகிறது. மீனவர்களின் சமூக நிலை, கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி மீனவ கிராமங்களில் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவை கட்டமைக்கப்படும். மீனவ கிராமத்தில் துறைமுக தங்கு தள முகத்துவாரம் முக்கியமானவையாகும்.

குளச்சல் துறைமுக விரிவாக்கம்

தமிழகத்தில் 30 முகத்துவாரங்கள் ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆழப்படுத்தும் போது மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும். அதாவது மீன் இனப்பெருக்கத்திற்காக முகத்துவாரத்துக்கு மீன்கள் வரும். அதுபோல் பிற இடங்களில் கடல் அரிப்பு தடுக்கப்படும். குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்காக 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக படகுகள் நிறுத்தவும், ஏல கூடம் அமைக்கவும் ஆய்வு செய்யப்படும். ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். ஆக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு சென்னையில் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதனை குமரி மாவட்ட மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒகி புயலில் காணாமல் போன மற்றும் பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அ.தி.மு.க. அரசு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணி

முடிவில் குளச்சல் விசைப்படகு யூனியன் செயலாளர் பிராங்கிளின் நன்றி கூறினார். குறும்பனை பெர்லின் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். முன்னதாக மீனவர்கள் கொட்டில்பாடு மற்றும் குறும்பனை ஆகிய 2 இடங்களில் இருந்து பேரணியாக விழா பந்தலுக்கு வந்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

விழாவில், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் மீனவர் நல வாரியம் மூலமாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் அனைத்து விசைப்படகுகளையும் தமிழக அரசு ஆய்வு செய்து லைசென்ஸ் வழங்க வேண்டும். நாட்டு படகு மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானிய விலை மண்எண்ணெய் 300 லிட்டரில் இருந்து 500 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.

உலக மீனவர் தினவிழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவதோடு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குளச்சல் காணிக்கை அன்னை திருத்தல பங்கு நிர்வாகம், பங்கு மக்கள், குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர்கள் நலச்சங்கம், குளச்சல் வியாபாரிகள், ஏலக்காரர்கள் பொதுநல அமைப்பு, கடலோர அமைதிகுழு மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட அனைத்து மீனவ இயக்கங்கள் கூட்டமைப்பு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story