திருச்சி காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


திருச்சி காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் காப்பகத்தில் தங்கி இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருச்சி,

மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலக்தாஸ். இவர் கோதுமையை அரைத்து மாவாக்கி விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரிபந்தி(வயது 37). இந்த தம்பதிக்கு பாவ்னா, கஞ்சன், தீபிகா என்ற 3 மகள்களும், நிகில் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி பந்தி குழந்தைகளை கையை பிடித்து வெளியே அழைத்து சென்றார்.

அப்போது நிகில் தாயின் கையை தட்டிவிட்டு வழித்தவறி சென்றதால் காயத்ரிபந்தி சிறிதுமனநலம் பாதிக்கப்பட்டார். பின்னர் நிகிலை குடும்பத்தினர் கண்டு பிடித்து விட்டனர். ஆனால் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த காயத்ரிபந்தி மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் ஏறி தமிழகத்தில் கும்பகோணத்துக்கு வந்தார்். அங்குள்ள இ.பி.அலுவலகம் அருகே சாலையோரம் 2 ஆண்டாக தங்கி இருந்தார்.

காப்பகத்தில் தங்க வைத்தனர்

இதற்கிடையே காயத்ரி பந்தியின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் கும்பகோணத்தில் இருந்த காயத்ரிபந்தியை திருச்சியில் அன்பாலயம் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் செந்தில் என்பவர் மீ்ட்டு ஓராண்டாக அவருடைய காப்பகத்தில் தங்க வைத்தார்.

தொடர்ந்து காயத்ரிபந்தியின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் சிறிதளவு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், மொழி தெரியாததாலும் ஒவ்வொரு முறையும் அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

புதிய முயற்சி

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று சுற்றித்திரிந்தவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் புதிய முயற்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் ரெயில்வே பாதுகாப்புபடையினர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், பாய்லர்ஆலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு ெகாடுத்து அவர்களுடைய குடும்பத்தினரை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த முயற்சியின் பலனாக காயத்ரிபந்தியின் குடும்பத்தினர் மத்திய பிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு, அவர்களுடைய குடும்பத்தினரை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வீடியோ கால் மூலம் காய்த்ரி பந்தியிடம் பேசினர். விரைவில் திருச்சிக்கு வந்து அவரை அழைத்து செல்வதாகவும் அப்போது அவர்கள் தெரிவி்த்தனர்.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இதனை தொடர்ந்து காயத்ரிபந்தியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி போலீஸ் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. அங்கு காயத்ரிபந்தி்யை அழைத்து செல்ல அவருடைய கணவர் பாலக்தாஸ், மகள் தீபிகா, மகன் நிகில் ஆகியோர் வந்து இருந்தனர். அவர்களிடம் காயத்ரிபந்தி்யை போலீசார் ஒப்படைத்தனர். தாயை கண்ட 2 பிள்ளைகளும் அவரை கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம் கூறுகையில், “மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பத்தினரை கண்டு பிடிக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டதில் 13 பேரின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

Next Story