ஓமலூர் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓமலூர்,
சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஓமலூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்திருந்தனர்.
இது பற்றி ரெயில் என்ஜின் டிரைவர் அளித்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் கற்கள்இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓமலூர் அருகே நாலுகால்பாலம் பகுதியில் மர்ம நபர்கள் ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளனர். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் ரெயிலை நாலுகால் பாலம் பகுதியில் நிறுத்தினார்.
பின்னர் இது குறித்து தின்னப்பட்டி ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கற்கள் சிதறி கிடந்தன. எனினும் ரெயில் செல்வதற்கு பிரச்சினை இல்லை என்று அறிந்த பிறகு எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
ரெயிலை கவிழ்க்க சதியா?இது தொடர்பான தகவலின் பேரில் நேற்று காலை அந்த பகுதிக்கு ரெயில்வே போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்?, ரெயிலை கவிழ்க்க சதி எதுவும் நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.