தக்கலையில் துணிகரம் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை-பணம் கொள்ளை


தக்கலையில் துணிகரம் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 25 Nov 2019 4:30 AM IST (Updated: 25 Nov 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் மார்த்தாண்டம் பிள்ளை (வயது 75), ஓய்வு பெற்ற மோட்டார் வாகன ஆய்வாளர். இவருடைய மனைவி மீனாட்சி அம்மாள் (69). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகனுக்கு திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். மகளுக்கும் திருமணமாகி திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இதனால், மார்த்தாண்டம் பிள்ளையும், மீனாட்சி அம்மாளும் கீழ்குளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

நகை-பணம் கொள்ளை

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மார்த்தாண்டம் பிள்ளை உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் திருவனந்தபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மார்த்தாண்டம் பிள்ளை நேற்று மாலை 4 மணிக்கு மனைவியுடன் வீடு திரும்பினார்.

அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற போது, பின் பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். படுக்கை அறைக்கு சென்ற போது, அங்கு ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்தது. அறையில் இருந்த பீரோ அலமாரிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மாயமாகி இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது.

வலைவீச்சு

பின்னர் இதுகுறித்து மார்த்தாண்டம் பிள்ளை தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் ஓரா, வீட்டில் இருந்து பத்மநாபபுரம் தெற்கு கோட்டை வாசல் வரை ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும், இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story