மணல் கடத்தலை தடுக்க 3 சோதனை சாவடிகள் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்


மணல் கடத்தலை தடுக்க 3 சோதனை சாவடிகள் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:30 PM GMT (Updated: 24 Nov 2019 8:58 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க 3 நிரந்தர சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் புதிதாக உணவகம் (கேண்டீன்) அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசாருக்கு குறைந்த விலையில் டீ, காபி, சாதம் கிடைக்கும் வகையில் 2-வது போலீஸ் கேண்டீன் நாமக்கல்லில் தொடங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த 80 போலீசார் நாமக்கல்லுக்கு பாதுகாப்பு பணிக்கு வந்தனர். இவர்களில் 40 பேர் தொடர்ந்து இங்கேயே வேலை செய்து வருகிறார்கள்.

இவர்கள் மணல் கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கும் தனிப்பிரிவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மணல் கடத்தலை தடுக்க வளையப்பட்டி, பரமத்திவேலூர், அணியாபுரம் ஆகிய பகுதிகளில் 3 நிரந்தர வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

3 போலீஸ் நிலையம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் புதிதாக 3 போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும், நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

ஒரு போலீஸ் நிலையத்தில் குறைந்தபட்சம் 30 போலீசார் பணியாற்ற வேண்டும். ஆனால் மாவட்டத்தில் 15 போலீசாருக்கு குறைவாக பணியாற்றும் காவல் நிலையங்கள் 5 உள்ளன. இங்கு போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story