மரவள்ளி கிழங்குக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


மரவள்ளி கிழங்குக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Nov 2019 4:45 AM IST (Updated: 27 Nov 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

மரவள்ளி கிழங்குக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி: கொப்பு, கிளை வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: காலிங்கராயன் பாசனப்பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டாக உள்ள நிலையில், 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வீடாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள், கரும்பு, நெல் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யக்கோரி வேளாண்மைத்துறையினர் கூறுகிறார்கள். நான் கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சளுக்கு காப்பீடு செய்தேன். ஆனால் இழப்பீடு தொகை இதுவரை கிடைக்கவில்லை.

ஈரோடு மாநகரில் பல இடங்களில் சாய, சலவை பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காலிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு: நிலக்கடலை, எள் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தேவையான அளவு விதை கிடைப்பதில்லை. கரும்பு ஆலைகளுக்கு கரும்புகளை கொடுத்து 3 மாதங்களுக்கு மேலாகியும், ஆலைகளில் இருந்து பணம் வழங்கப்படவில்லை. கடந்த 2018-2019 ஆம் ஆண்டு மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது எனவே ராசிபுரத்தில் மரவள்ளி கிழங்கு வாரியம் அமைப்பது சரியாக இருக்கும். இதேபோல் ஈரோட்டில் மஞ்சள் வாரியமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரவள்ளி கிழங்குக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆர்.டி.ஓ. முருகேசன் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்ய ஆர்.டி.ஓ., பொதுப்பணித்துறையினர், விவசாய சங்கத்தினர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த பிறகு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலின் ஆயக்கட்டு நிலத்தில் வீடு கட்டினாலும், சூளை அமைத்தாலும் அகற்றப்பட்டு வருகிறது. ஆயக்கட்டுப்பகுதி முழுமையாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 7 ஆயிரம் ஏக்கர் கட்டிடங்களாக மாறி இருப்பது என்பது தவறான தகவலாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story