வருவாய்த்துறை அதிகாரி லஞ்சம் கேட்டதாக கூறி, தேனி போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை
வருவாய்த்துறை அதிகாரி லஞ்சம் கேட்டதாக கூறி தேனி போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர். அப்போது சாலையின் குறுக்கே டிராக்டர் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி,
தேனி தாசில்தார் தேவதாஸ் தலைமையில் வருவாய்த்துறையினர், தேனி பங்களாமேடு திட்டச்சாலையில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மண் ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் வந்தது. டிராக்டரை பழனிசெட்டிபட்டியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் வழிமறித்து மண் எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டு இருக்கிறதா? என்று கேட்டனர்.
அப்போது, போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டதால் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக அந்த மண்ணை எடுத்துச் செல்வதாக டிரைவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த டிராக்டர் உரிமையாளரான தேனியை சேர்ந்த வக்கீல் செல்வம், அவருடைய தம்பி மகேந்திரன் ஆகியோர் அங்கு வந்து அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.
பின்னர் போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்தனர். மதுரை சாலையில் இருந்து பங்களாமேடு திட்டச்சாலை சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் அங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைக்காக இரும்பு பேரல்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் நிரப்புவதற்கு மண் கேட்டதன் அடிப்படையில் டிராக்டரில் மண் எடுத்து வரப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் வருவாய்த்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த டிராக்டரை தேனி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு கூறினர். அதன்படி டிராக்டர் தேனி தாலுகா அலுவலகம் நோக்கி சென்றது. செல்லும் வழியில் தேனி போலீஸ் நிலையம் முன்பு சாலையின் குறுக்கே திடீரென டிராக்டர் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் வக்கீல் செல்வம் தலைமையில் மேலும் சில வக்கீல்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பொது பயன்பாட்டுக்காக போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் மண் எடுத்து வந்த டிராக்டரை பிடித்ததுடன், டிராக்டரை விடுவிக்க வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதுதொடர்பாக தேனி தாசில்தார் தேவதாஸ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் டிராக்டரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story