குமரியில் இருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.160 கோடியில் திட்டம்


குமரியில் இருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.160 கோடியில் திட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.160 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்தியகோபால் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்தியகோபால் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி) நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நாகர்கோவில்- வடக்கு தாமரைக்குளம், கோதையாறு வடிநில கோட்டம், பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிஷன் அணைக்கட்டுப்பகுதியில் நீர்வரத்து மற்றும் உபரிநீர் கடலில் கலப்பது ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

ராதாபுரத்துக்கு தண்ணீர்

தொடர்ந்து தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்தியகோபால் கூறுகையில், குமரி மாவட்டம் கோதையாறு வடிநில கோட்டம் வடக்கு தாமரைக்குளம் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிஷன் அணைக்கட்டின் மொத்த நீளம் 67 மீட்டர், உயரம் 1.20 மீட்டர் ஆகும். இந்த அணைக்கட்டின் மூலம் 100 ஏக்கர் நேரடி பாசன பரப்பு பயன் பெறுகிறது. இந்த அணைக்கட்டு 2 மதகுகளை கொண்டதாகும். மிஷன் அணைக்கட்டில் இருந்து அதிகபட்சமாக 21.078 கன அடி உபரிநீர் வழிந்தோடி மணக்குடி காயல் வழியாக கடலில் போய் சேர்கிறது.

குமரி மாவட்டத்தின் அருகாமையில் உள்ள நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையிலும், அவ்வப்போது ஏற்பட்டு வருகின்ற குடிதண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்காகவும், மிஷன் அணைக்கட்டு வழியாக வீணாக கடலில் கலக்கும் உபரிநீரினை, ராதாபுரத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த ஆய்வு நடைபெறுகிறது.

ரூ.160 கோடி செலவு

வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை 9.8 கி.மீ. நீளத்திற்கு பைப் லைன் மூலம் நீரேற்றம் செய்து, அதை கால்வாய் வழியாக ராதாபுரம் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான இந்த திட்டத்துக்கு தோராயமாக ரூ.160 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. மிஷன் அணைக்கட்டின் வழியாக வீணாக கடலில் கலக்கும் உபரிநீர் ராதாபுரத்துக்கு செல்லும்போது அங்குள்ள விவசாய நிலங்களுக்கும், குடிநீர் பிரச்சினைகளுக்கும் இதன்மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இதன் வாயிலாக அங்குள்ள விவசாய பயிர்களின் உற்பத்தி அதிகளவு உயரும். இதேபோன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அணைக்கட்டுகள், ஏரிகளில் வழிந்தோடும் வீணாகும் உபரி நீரினை அருகாமையில் உள்ள தேவைப்படும் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 80 முதல் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை கலெக்டர்

இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்லா மன்னான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்தியகோபால் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் கணேசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சையத் சுலைமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது குமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள குடிமராமத்து பணிகள், ஆறுகள் சீரமைப்பு, நீர்வள ஆதாரங்கள், மழைநீர் சேகரிப்பு, வெள்ளத்தின் போது உபரிநீர் கடலில் கலப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story