மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:00 PM GMT (Updated: 28 Nov 2019 5:50 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் திருமூர்த்தி அணை, படகு இல்லம், வண்ணமீன் காட்சியகம், சிறுவர்பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன.

அது மட்டுமின்றி கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் உள்ள கொட்டைஆறு,பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டிஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைக்கு பின்பு கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறிப்பிட்ட இடைவெளியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

மழைபெய்யும்போது ஆறுகளில் நீர்வரத்து கூடுவதும் பின்பு குறைந்து விடுவதுமாக உள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு வரும் நீர்வரத்து கூடுவதும் பின்பு சில மணி நேரத்தில் குறைந்து விடுவதுமாக உள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அருவி பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகள் மூலமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. பஞ்சலிங்க அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இது குறித்த தகவலை மலைவாழ்மக்கள் கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கோவில் அருகே உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமிதரிசனம் செய்தனர்.மேலும் திருமூர்த்திமலைப் பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் பலத்தமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது. இதனால் அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் தளி பகுதியில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் அவ்வப்போது சாரல்மழை பெய்து வந்தது.

Next Story