பெரம்பலூர் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் 25 பவுன் நகை-ரூ.45 ஆயிரம் திருட்டு


பெரம்பலூர் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் 25 பவுன் நகை-ரூ.45 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 28 Nov 2019 11:00 PM GMT (Updated: 28 Nov 2019 7:30 PM GMT)

பெரம்பலூர் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் மொத்தம் 25 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், பட்டுப்புடவைகள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கல்யாண் நகர் 4-வது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 58). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக குடும்பத்தினர், அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ராஜசேகர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ராஜசேகர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக ராஜசேகர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராஜசேகரின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் திருட்டு போயிருந்தன. அவற்றை மர்ம நபர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரம்பலூர் மதனகோபாலபுரம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜாதேசிங்(61) என்பவருடைய வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து, அதில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜாதேசிங்கின் மாமனார் இறந்துவிட்டதால், துக்க காரியத்தில் கலந்து கொள்ள, அவர் விருத்தாசலத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி, மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். இதேபோல் பாரதிதாசன் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஜெயராமன்(67), கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடந்துள்ளது.

16½ பவுன் நகைகள்

மேலும் பெரம்பலூர் அருகே அரணாரை ஏ.வி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டில் நகை-பணம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் பானு(45) என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பாலசுப்ரமணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் லெட்சுமி பாலா, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வருவதால், அவருடன் பானு ஏ.வி.ஆர். நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் லெட்சுமி பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி சுற்றுலாவிற்கு சென்று விட்டார். இதனால் பானு வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை ஏ.வி.ஆர். நகரில் பானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பானு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 16½ பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு, 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், விலையுயர்ந்த கைக்கடிகாரம், டி.வி. ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது, தெரியவந்தது. அந்த வீட்டிற்கும் விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

ஒரே கும்பலா?

அங்கு போலீசார் விசாரணையை முடிப்பதற்குள், பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ராயல் நகர் மேட்டுத்தெருவில், விவசாயியான ஜெயராமன்(58) குடும்பத்தினருடன் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயராமன் தனது சொந்த ஊரான சிறுவயலூருக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருட்டு போயிருந்தது, தெரியவந்தது. இது தொடர்பாக தனித்தனியாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஒரே நாளில் பெரம்பலூர் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெரம்பலூரில் 4 வீடுகளில் மொத்தம் 25 பவுன் நகைகளும், ரூ.45 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story