திருவெறும்பூர் அருகே முருகன் தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை


திருவெறும்பூர் அருகே முருகன் தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 29 Nov 2019 4:45 AM IST (Updated: 29 Nov 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே முருகன் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி சுவரில் துளையிட்டு ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 28½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. விசாரணையில் திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்பட 5 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

சுரேஷை திருச்சிக்கு அழைத்து வந்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். பெங்களூருவில் சரண் அடைந்த முருகனை 55 நாட்களுக்கு பிறகு, திருச்சி கோட்ைட குற்றப்பிரிவு போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரிடம் 14 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு 7 நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி வழங்கினார்.

முருகன் தங்கியிருந்த வீட்டில் சோதனை

இதையடுத்து முருகனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிப்பதற்கு முன்பு முருகன் திருவெறும்பூர் அருகே நறுங்குழல் நாயகிநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். 2 மாதங்களாக அந்த வீட்டில் தங்கி தான் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினார். அந்த வீட்டுக்கு நேற்று முருகனை அழைத்து சென்ற போலீசார் அங்கிருந்து சில உடைகள், பொருட்களை கைப்பற்றினர்.

மேலும், முருகன் கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பரபரப்பு வாக்குமூலம்

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்து விட்டு நகைகளுடன் மதுரைக்கு சென்றோம். அங்கு தராசு மூலம் நகைகளை பிரித்து கொண்டோம். பின்னர் சுரேஷ் திருவாரூருக்கு புறப்பட்டுச் சென்றான். நான் சென்னைக்கு புறப்பட்டேன். ஆனால் சென்னைக்கு செல்லும் வழியில் பிறகு வந்து எடுத்து கொள்ளலாம் என பெரம்பலூர் அருகே ஒரு காட்டில் நகைகளை புதைத்து வைத்தேன்.ஆனால் திருவாரூரில் நகையுடன் மணிகண்டன் மாட்டி கொண்டதால் நான் சரண் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இல்லையென்றால் சிறந்த படங்களை தயாரித்து இருப்பேன். தமிழில் சினிமா படம் எடுக்க நிறைய செலவு ஆனதால் தான் தெலுங்கில் எனது அக்காள் மகன் சுரேசை வைத்து குறும்படம் தயாரித்தேன். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது.

மீண்டும் படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன். கொள்ளை சம்பவங்கள் தொடர்பான திரைப்படங்களை அதிகம் விரும்பிப்பார்ப்பேன். இதனால் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளை அடிப்பது எப்படி என தெரிந்து வைத்து இருந்தேன். தற்போது என்னிடம் எந்த நகைகளும் இல்லை.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Next Story