மயிலம் அருகே, பஞ்சராகி நின்ற ஆம்னி பஸ் மீது மற்றொரு பஸ் மோதல்; டிரைவர் பலி - 56 பெண்கள் காயம்
மயிலம் அருகே பஞ்சராகி நின்ற ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். 56 பெண்கள் காயமடைந்தனர்.
மயிலம்,
தஞ்சையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கள்ளக்குறிச்சி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமர் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென அந்த பஸ்சின் டயர் பஞ்சரானது. உடனே அந்த பஸ்சை சாலையோரமாக நிறுத்தி, பஞ்சரான டயரை கழற்றி விட்டு, மாற்று டயரை பொருத்தும் பணியில் டிரைவர் ராமர் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 56 பெண்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு ஆம்னி பஸ் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருச்சி துறையூரை சேர்ந்த சக்திவேல் (27) என்பவர் ஓட்டி வந்தார். அதில் மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(28) என்பவர் இருந்தார்.
விளங்கம்பாடி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி ஏற்கனவே பஞ்சராகி சாலையோரத்தில் நின்ற ஆம்னி பஸ்சின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆம்னி பஸ்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த டிரைவர் ராமர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்சியில் இருந்து வந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த அமுதா (37), சரசுவதி (56), பிரேமா (41), ஆதிலட்சுமி (56), நீலாவதி (50), சுகந்தி (30), துளசி (35), லோகநாயகி (63) உள்பட 56 பெண்கள் மற்றும் டிரைவர் சக்திவேல் ஆகியோர் காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 2 ஆம்னி பஸ்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story