மாவட்ட செய்திகள்

காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம் + "||" + Kaavi joins hands with Congress: new era in politic

காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்

காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி:  அரசியலில் புதிய சகாப்தம்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை எனும் கூற்று, மராட்டிய அரசியல் களத்தில் வலுவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசம், மேற்குவங்க மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது அதிக உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 24-ந்தேதி வெளியான சட்டசபை தேர்தல் முடிவு அதிரடி திருப்பங்களையும், அரசியல் அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டியதாக அமைந்தது. இந்த அரசியல் காட்சிகள் திரில் படத்தை விட வேகமாக நகர்ந்து அரசியல் பார்வையாளர்களை அதிர வைத்தது.

மராட்டிய சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணிக்கு சாதகமானது தான். ஆனால் அதே தேர்தல் முடிவு அந்த கூட்டணிக்கு உலை வைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல்-மந்திரி நாற்காலி மீதான ஆசையால், இரு கட்சிகளின் 30 ஆண்டு கால கூட்டணி உறவு முறிந்து போய் விட்டது. யாரை எதிர்த்து மாநிலத்தில் ஆண்டாண்டு காலமாக சிவசேனா அரசியல் செய்ததோ அந்த பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சியும் அமைத்து விட்டது.

இந்த அரசியல் நாடகத்துக்கு மத்தியில் பாரதீய ஜனதா தனது சித்து விளையாட்டை காண்பித்தது. “எங்களுடன் தேர்தலில் போட்டியிட்டு விட்டு, எதிர் அணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு மட்டும் தான் தெரியுமா?, அதிகாரம் குவிந்து கிடக்கும் எங்களால் எதுவும் செய்ய முடியாதா?” என்ற மிதப்பில் அந்த கட்சி ரகசியமாக காய் நகர்த்தியது. எதிரணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரை தன்பக்கம் சாய்த்து, நாட்டுக்கு அம்பலப்படுத்தாமல் ஆட்சி அமைத்தது.

பின்னர் துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது கட்சிக்கே அஜித்பவார் தலைதெறிக்க ஓட்டம் பிடித்ததால், பாரதீய ஜனதாவின் ஆட்சி கனவு 4 நாட்களில் கலைந்து போனது. ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி’ என்ற கதையாக பாரதீய ஜனதா தனக்கு எதிரான விமர்சனத்தை வாரிக்கொண்டது தான் மிச்சம்.

தேர்தல் பிரசாரத்தின் போது அஜித்பவாரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஊதி தள்ளிய பாரதீய ஜனதா, அவருடனேயே கைகோர்த்த படலத்தால், இனி ஊழல் எதிர்ப்பு பற்றி எப்படி பேசுவது? கூட்டணி மாறி துரோகம் இழைத்து விட்டதாக சிவசேனாவை ஆணித்தரமாக எப்படி விமர்சிப்பது? என்பது போன்ற தர்மசங்கடத்தில் சிக்கி தவிக்கிறது, பாரதீய ஜனதா.

‘கிரிக்கெட்டை போல தான் அரசியலும், கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்’ என்ற மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சூசக முழக்கம் அவரது கட்சிக்கு எதிராகவே பலித்து விட்டது.

மொத்தத்தில், பாரதீய ஜனதாவுக்கு அரியணை கை நழுவி, பழம் நழுவி பாலில் விழந்த கதையாக சிவசேனாவுக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது. ஆட்சி சிம்மாசனத்தில் உத்தவ் தாக்கரே அமர்ந்ததன் மூலம், காவியும் (சிவசேனா), காங்கிரசும் கரம் கோர்த்து இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்து விட்டன.

ஆனால் உத்தவ் தாக்கரேயால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி தேரை நகர்த்தி செல்ல முடியுமா? என்பது தான் புதிதாக எழும் கேள்வி. ஏனெனில் பாரதீய ஜனதாவை போல சிவசேனா தீவிர இந்துத்வா கொள்கையை கடைபிடிக்கும் கட்சி. மண்ணின் மைந்தன் கொள்கையில் உறுதி கொண்ட கட்சி. ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோ மதச்சார்பின்மை கொள்கை கொண்ட கட்சிகள். குறிப்பாக காங்கிரஸ் தேசிய பார்வை கொண்ட கட்சி. கீரியும், பாம்பும் ஒன்று சேர்ந்தால் மோதல்கள், முட்டல்கள் இல்லாமல் இருக்குமா?.

மராட்டியத்தில் ஆட்சியை பிடித்து உள்ள இந்த புதிய கூட்டணி கொள்கைகளை பற்றி பெரியளவில் விவாதித்து உருவாக்கப்பட்டதல்ல. சிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து ஓரம் கட்டிவிட்டது என்பதே உண்மை. அரசியல் என்பது இப்படி சூழ்ச்சி நிறைந்த படலம் தான்.

உத்தவ் தாக்கரே சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாலும், கடிவாளம் அரசியலில் முதிர்ச்சி பெற்ற காங்கிரஸ் மற்றும் வலுவான தலைவரான தேசியவாத காங்கிரசின் சரத்பவாரின் கையில் அல்லவா இருக்கிறது. அவர்களை உத்தவ் தாக்கரே எப்படி சமாளிக்க போகிறார்?. 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பெரிய கட்சியான பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருக்குமா?. மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமான போக்கை உத்தவ் தாக்கரே எப்படி கடைப்பிடிக்க போகிறார்? என்பது போன்ற கேள்விகள் தொங்கி கொண்டு நிற்கின்றன.

கொள்கை முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவில் உத்தவ் தாக்கரே தனது ஆட்சியை அவ்வளவு எளிதாக 5 ஆண்டையும் கடத்தி விட முடியாது என்பது அரசியல் நோக்கர்களின் வலிமையான கருத்தாக உள்ளது.

மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் பிடிவாத குணத்துடன் அவரது மகன் உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்கும் விவகாரத்தில் சாதித்து விட்டார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? என்பதையும் நிரூபித்து விட்டார். அதேபோல காங்கிரசுடன் சேர்ந்த காவி (சிவசேனா) புதிய அத்தியாயம் படைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
2. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.
3. காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்- டி.ஆர்.பாலு
காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம், அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என டி.ஆர்.பாலு கூறினார்.
4. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
5. பால் தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது : மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே
பால்தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.