பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 4:30 AM IST (Updated: 30 Nov 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர், 

தஞ்சை களிமேடு ரோடு பரிசுத்தம் நகரை சேர்ந்தவர் ஆபிரகாம்(வயது 60). இவருடைய மனைவி கோவில்பிள்ளை(55). இவர் நெல்லையில் உள்ள தனது உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்கு முடிவு செய்தார்.

இதற்காக பஸ் ஏற்றி விடுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி தனது மனைவியை ஆபிரகாம் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்றார். வல்லம் நம்பர்-1 சாலையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், திடீரென கோவில்பிள்ளை கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார்.

ஆனால் நகையை பறிக்க விடாமல் கோவில்பிள்ளை பிடித்து கொண்டதால் மர்ம நபர் வேகமாக இழுத்தார். இதில் பாதி நகை அறுந்ததுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கோவில்பிள்ளை கீழே விழுந்தார். மர்மநபர் தன் கையில் கிடைத்த பாதி நகையுடன் தப்பி சென்று விட்டார்.

படுகாயம் அடைந்த கோவில்பிள்ளையை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் விசாரித்து கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய திருச்சி பாலக்கரை மல்லிபுரதோட்டத்தை சேர்ந்த தொழிலாளியான மணியை(40) கைது செய்தார்.

பின்னர் அவரை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி எழிலரசி விசாரணை செய்து மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜராகி வாதாடினார்.

Next Story