கோத்தகிரி அருகே, மேரக்காய் தோட்டங்களில் புகுந்து வனவிலங்குகள் அட்டகாசம் - விவசாயிகள் கவலை

கோத்தகிரி அருகே மேரக்காய் தோட்டங்களில் புகுந்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்தன. இதில் மேரக்காய் கொடிகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தொழிலுக்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதுடன், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் சாகுபடி செய்ய பந்தல்கள் அமைத்து மேரக்காய் பயிரிட்டு வருகின்றனர். இதில், உணவு தேடி வரும் காட்டெருமை, காட்டுப்பன்றிகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரி அருகே கப்பட்டி கிராமத்தில் உள்ள மேரக்காய் தோட்டங்களுக்குள் காட்டெருமை கூட்டம் புகுந்தது. பின்னர் அந்த காட்டெருமைகள், அங்கிருந்த மேரக்காய் கொடிகளை தின்று சேதப்படுத்தியதுடன் கொடிக்கம்புகளை முட்டித்தள்ளியது.
மேலும் அதே தோட்டங்களுக்குள் காட்டு பன்றிகளும் மேரக்காய் கொடிகளின் வேர்களை தோண்டி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் தோட்டத்து விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மாற்றுப் பயிராக மேரக்காய் பயிரிட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிட பந்தல் அமைக்க சுமார் ரூ.4 லட்சம் வரை செலவு ஆகிறது. காட்டெருமைகள் இந்த பந்தல்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வனவிலங்குகளின் தொல்லை காரணமாக இப்பகுதியில் பயிரிட்டிருந்த சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான மேரக்காய் பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story