தஞ்சையில் செருப்புக்கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


தஞ்சையில் செருப்புக்கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 30 Nov 2019 11:15 PM GMT (Updated: 30 Nov 2019 7:23 PM GMT)

தஞ்சையில் செருப்பு கடை உரிமையாளரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் (வயது 55). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட அமைப்பான சிமியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் வேறு ஒரு அமைப்பிலும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அதில் இருந்து விடுபட்டு தற்போது தஞ்சையில் செருப்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் முகநூலில் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக ஷேக் அலாவுதீன் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 6.30 மணி அளவில் ஷேக் அலாவுதீன் வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் அந்த வீடு முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் அவருடைய செருப்பு கடையிலும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கதவை பூட்டிக்கொண்டு அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். 2 மணி நேரம் நடத்திய சோதனைக்கு பிறகு அவரிடம் இருந்த ஒரு லேப்டாப், மொபைல் போன் மற்றும் டைரி ஒன்றையும் கைப்பற்றினர்.

பின்னர் ஷேக் அலாவுதீனை அழைத்துக்கொண்டு தஞ்சை நகர கிழக்குப்போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மாலை 5.20 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

பின்னர் ஷேக்அலாவுதீனிடம் இருந்த சில புத்தகங்கள் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றிய லேப்டாப், செல்போன், 3 சிம்கார்டு ஆகியவற்றையும் அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மனை ஷேக்அலாவுதீனிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசநகரில் உள்ள டிப்ளமோ என்ஜினீயரான சர்புதீன் (வயது 29) வீட்டுக்கு கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. துணை சூப்பிரண்டு ஜார்ஜ் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று காலை வந்தனர்.

அவர்கள் சர்புதீன் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். வீ்ட்டில் இருந்து அவருடைய குடும்பத்தினர் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சார்பில் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கருத்து பதிவுகளுக்கு சர்புதீன் முகநூலில் ஆதரவு தெரிவித்து இருந்ததும், இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை பதிவிட்டதும் தெரிய வந்தது. கடந்த ஒரு மாதமாக சர்புதீனின் முகநூல் பக்கம் மற்றும் அவரது நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதன்அடிப்படையில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது வீட்டில் இருந்த சர்புதீனின் மைத்துனர் ஜாபரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜாபர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துபாய் செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் திருச்சி-மதுரை தேசிய நெடு்ஞ்சாலையில் அளுந்தூர் அருகே சர்புதீன் நடத்தி வரும் ஜெராக்ஸ் கடையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அவரிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 6 செல்போன்கள், பென்டிரைவ், மெமரிகார்டு, சிம்கார்டுகள், சி.டி. மற்றும் டி.வி.டி.க்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் மரம் வெட்டுவதற்கு வைத்து இருந்த கோடரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சர்புதீன், ஜாபர் ஆகியோரை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு சர்புதீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ், மெமரிகார்டு உள்பட அனைத்து ஆவணங்களையும் எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்து, தடயவியல் சோதனைக் குட்படுத்த உள்ளனர்.

Next Story