குஜிலியம்பாறை அருகே தனியார் பஸ் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி


குஜிலியம்பாறை அருகே தனியார் பஸ் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 5:10 PM GMT)

குஜிலியம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே உள்ள ராமகிரியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (38). என்ஜினீயர். இவர், கோவையில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் உமாமகேஸ்வரன் நேற்று முன்தினம் சொந்த ஊரான ராமகிரிக்கு வந்தார். அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர், தொக்கம் எடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (44) என்பவரை அழைத்து கொண்டு புளியம்பட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் தொக்கம் எடுத்து விட்டு, 2 பேரும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை முத்துக்குமார் ஓட்டினார். திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ராமகிரி பிரிவில் மோட்டார் சைக்கிள் திரும்பியது.அப்போது, எதிரே கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சும் சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான முத்துக்குமாருக்கு ஈஸ்வரி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். உமா மகேஸ்வரனுக்கு பிரசன்ன குமாரி (30) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story