கெங்கவல்லி அருகே காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 6 பவுன் நகைகள் திருட்டு
கெங்கவல்லி அருகே காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 6 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப்பணிகளை எடுத்து மேற்கொள்ளும் காண்டிராக்டராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நடுவலூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய தோட்டத்துக்கு சென்று தங்கி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அவர்கள் வீட்டை வந்து பார்க்கும் போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே பிரபாகரன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் 6 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பிரபாகரன் கெங்கவல்லி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருடர்கள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்ததுடன், ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story