தர்மபுரி மாவட்டம் முழுவதும் சாலைகளை தரம் உயர்த்த ரூ.54 கோடி ஒதுக்கீடு - நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் சாலைகளை தரம் உயர்த்த ரூ.54 கோடி ஒதுக்கீடு - நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 7:43 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் சாலைகளை தரம் உயர்த்த ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரி செல்லநம்பி தெரிவித்தார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. ஒருசில இடங்களில் சிறுபாலம், மேம்பாலம் இல்லாமல் சாலைகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்தந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 77.26 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட மேல்கொட்டாவூர் முதல் கெட்டுப்பட்டி வரை சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கோட்ட பொறியாளர் செல்லநம்பி, உதவி கோட்ட பொறியாளர் ரஞ்சினி லாரன்ஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதேபோன்று தர்மபுரி-மொரப்பூர் சாலையில் இருந்து மூக்கனூர்-அரூர் சாலை வரையிலும் அமைக்கப்படும் புதிய தார்சாலை பணிகளை கோட்டப்பொறியாளர் மற்றும் அரூர் உதவி கோட்ட பொறியாளர் சுரே‌‌ஷ்குமார் மற்றும் ஆய்வாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை அதிகாரி செல்லநம்பி கூறுகையில், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் புதிய தார்சாலைகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த சாலைகளை தரம் உயர்த்த அரசு ரூ.53.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Next Story