வடலூர் பகுதியில் பெய்த கனமழையால், பரவனாற்று கரையில் உடைப்பு; கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது
வடலூர் பகுதியில் பெய்த கனமழையால் பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரை உடைந்தது. கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் தத்தளித்த 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேலக்கொளக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேட்டுத்தெரு மட்டும் வயல்வெளிகளுக்கு மத்தியில் தீவு போல் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் பரவனாறு செல்கிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வடலூர் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வடலூர் அருகே மேலக்கொளக்குடி கிராமத்தில் உள்ள பரவனாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதற்கிடையே என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்தும் தண்ணீர் பரவனாற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் பரவனாற்றில் கொள்ளளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக மேலக்கொளக்குடியில் உள்ள பரவனாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இந்த வெள்ளம் மேலக்கொளக்குடி மேட்டுத்தெருவில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல அதிகளவு தண்ணீர் வந்து, வீடுகளுக்குள் புகுந்தது. அப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வீடுகளில் இருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அந்த தெருவை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 20 பேரை கொண்ட மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மேலக்கொளக்குடி கிராமத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். மேலும் வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பாக தூக்கிச் சென்று, அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர். தொடர்ந்து பள்ளியில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.இதற்கிடையே அமைச்சர் எம்.சி.சம்பத், கலெக்டர் அன்புசெல்வன் ஆகியோர் பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தையும், குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதையும் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பாய் உள்ளிட்டவை தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
Related Tags :
Next Story