ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கடலுக்கு வீணாக செல்லும் 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் - தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கடலுக்கு வீணாக செல்லும் 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் - தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. எனவே, தாமிரபரணியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம், 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்தின் முதலாவது தடுப்பணையான மருதூர் தடுப்பணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 34 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் செல்கிறது. மருதூர் மேலக்காலில் வினாடிக்கு 1,030 கனஅடி தண்ணீரும், கீழக்காலில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் செல்கிறது.

மருதூர் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் மெஞ்ஞானபுரம் சடையநேரி குளம் நிரம்பி மறுகால் விழுந்து, உடன்குடி தாங்கைகுளத்துக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது தாங்கைகுளமும் நிரம்பி மறுகால் விழுந்து, கருமேனி ஆற்றின் வழியாக மணப்பாடு கடலுக்கு செல்கிறது. உடன்குடி பகுதியில் உள்ள கல்லநேரி, புல்லாநேரி உள்ளிட்ட அனைத்து குளங்களும் நிரம்பி விட்டன. மேலும் சடையநேரி கால்வாயின் மற்றொரு பிரிவு மூலம் வைரவன்தருவை குளம் நிரம்பி, புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.

தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 34 ஆயிரத்து 763 கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகிறது. அந்த கால்வாயின் மூலம் பாசன வசதி பெறும் கடைசி குளமான குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் நிரம்பி மறுகால் விழுந்து, கருமேனி ஆற்றின் வழியாக மணப்பாடு கடலுக்கு செல்கிறது.

மேலும் திருச்செந்தூர் ஆவுடையார்குளம் நிரம்பி மறுகால் விழும் தண்ணீரானது மறுகால் ஓடையை மூழ்கடித்து செல்வதால், திருச்செந்தூர் பைபாஸ் ரோடு, காமராஜர் ரோடு, டி.பி. ரோடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மறுகால் ஓடையில் உள்ள அடைப்புகளை அகற்றி, வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகியவை அடைக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து செல்லும் தண்ணீரானது ஏரல் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு, முக்காணி வழியாக புன்னக்காயல் கடலுக்கு செல்கிறது. பலத்த மழை காரணமாக, புன்னக்காயல் புனித சவேரியார் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்தது.

இதற்கிடையே, வருங்காலங்களில் இதுபோல் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story