கம்பம் பகுதியில் தொடர்மழை: வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை


கம்பம் பகுதியில் தொடர்மழை: வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 Dec 2019 4:15 AM IST (Updated: 2 Dec 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அவற்றை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை பாசனத்தின் மூலம் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கரும், தேனிவட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கரும், போடிவட்டத்தில் 488 ஏக்கரும் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. இதில் முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதையொட்டி கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். தற்போது சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக வளர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கின்றன.எனவே விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் கவலையில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழையால் வயலில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் எந்திரத்தின் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியவில்லை. ஆட்களை வைத்து அறுவடை செய்யலாம் என்றால் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நெல் அறுவடை செய்யவில்லை என்றால் சாய்ந்த நெற்பயிர்கள் முளைத்து விடும் சூழ்நிலை உள்ளது. இதனால் கடும் இழப்பு ஏற்படும். எனவே மழையால் சாய்ந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story