அரியலூர் மாவட்ட உள்ளாட்சி பகுதிகளில் 1,988 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்


அரியலூர் மாவட்ட உள்ளாட்சி பகுதிகளில் 1,988 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 7:18 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 1,988 பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அரியலூர்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக அமலுக்கு வந்தன.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. மேலும் அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளும், அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. இந்த 6 ஊராட்சி ஒன்றியங்களில் 201 ஊராட்சிகள் உள்ளன.

2 கட்டங்களாக தேர்தல்

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 201 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி இடங்கள், 1,662 வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்கள், 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி இடங்கள், 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 113 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவி இடங்கள் என ஊரக பகுதிகளில் மொத்தம் 1,988 பதவி இடங்கள் காலியாக உள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1,988 பதவியிடங் களுக்கு 2 கட்டங்களாக நேர்முக தேர்தலும், அதனை தொடர்ந்து 1 மாவட்ட ஊராட்சி தலைவர், 1 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 6 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள், 6 ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், 201 கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள் ஆகிய 215 பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1,988 பதவியிடங்களுக்கு வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள்

இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் 2019-க்கான 6 ஊராட்சி ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளுக்கான வாக்காளர்கள் பட்டியல்கள் முறையே அரியலூர் ஒன்றியத்தில் 43,016 ஆண் வாக்காளர்கள், 42,022 பெண் வாக்காளர்கள், 3 திருநங்கை வாக்காளர்கள், திருமானூர் ஒன்றியத்தில் 47,134 ஆண் வாக்காளர்கள், 47,036 பெண் வாக்காளர்கள், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 46,201 ஆண் வாக்காளர்கள், 46,489 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் ஆண்டிமடம் ஒன்றியத்தில் 44,589 ஆண் வாக்காளர்கள், 45,347 பெண் வாக்காளர்கள், தா.பழூர் ஒன்றியத்தில் 42,061 ஆண் வாக்காளர்கள், 41,486 பெண் வாக்காளர்கள், 4 திருநங்கை வாக்காளர்கள், செந்துறை ஒன்றியத்தில் 45,378 ஆண் வாக்காளர்கள், 46,210 பெண் வாக்காளர்கள், அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 24,473 ஆண் வாக்காளர்கள், 26,151 பெண் வாக்காளர்கள், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் 8,191 ஆண் வாக்காளர்கள், 8,398 பெண் வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,01,043 ஆண் வாக்காளர்கள், 3,03,139 பெண் வாக்காளர்கள், 7 திருநங்கை வாக்காளர்கள் என மொத்தம் 6,04,189 வாக்காளர்கள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


Next Story