மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு


மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:45 PM GMT (Updated: 3 Dec 2019 3:20 PM GMT)

சின்னமனூர் அருகே மேகமலை மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே மேகமலை உள்ளது. ஓங்கி உயர்ந்துள்ள மரங்கள், ரம்மியமான சூழலில் மழைச்சாரலில் நனைந்தபடி, பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை தோட்டங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டும்.

சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, மேகமலை மலை அடிவார பகுதியான தென்பழனி முதல், மேகமலையின் ஹைவேவிஸ் வரையிலான 36 கி.மீ. தூரம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மேகமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மேகமலை மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகளும் உருண்டு மலைப்பாதையில் விழுந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக, தமிழன்காடு பகுதியில் இருந்து கடனாஎஸ்டேட் வரையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலை முழுவதும் மண்ணும், கல்லும் மூடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மேகமலைக்கு செல்லக்கூடிய வாகனங்களை மலை அடிவாரமான தென் பழனியில் போலீசாரும், வனத்துறையினரும் தடுத்து நிறுத்தினர். அதேபோல் மலையின் மீது இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் ஹைவேவிஸ் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் மலைப்பாதையை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மலைப்பாதையில் விழுந்த மண்ணையும், மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

Next Story