மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன + "||" + Heavy rains in Nilgiris district: On the Coonoor- Mettupalayam road Giant rocks were falling

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் 2-வது நாளாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிஅளவில் பெய்த மழையினால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிஅளவில் லேசான மழை பெய்தது. அப்போது திடீரென குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் நந்தகோபால் பாலம் அருகே ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, ராட்சத பாறையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து உள்ளன. இந்த பாறைகளை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் மரம் மற்றும் அபாயகரமான பாறைகள் எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. இதேபோல் தொடர் மழையினால் மண்சரிவு ஏற்படும் நிலையும் உள்ளது.

அதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் இன்று (நேற்று) 2-வது நாளாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் மற்றும் மழையின் தாக்கம் முடிந்தபின் வாகன போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அங்கு கடும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. அதனால் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தோட்ட பணிகளுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

பனி மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களில் செல்கிறார்கள்.

நேற்றுமுன்தினம் பெய்த கனமழையின் காரணமாக முக்கிய அணைகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்தி மந்து போன்ற அணைகள் மீண்டும் நிரம்பி வருகின்றன.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலையில் பெய்த மழையின் காரணமாக ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. கேத்தி காந்திநகரில் மண்சரிவு ஏற்பட்டதால் 4 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. இதேபோல் கேத்தி பாலாடாவில் 2 வீடுகளில் வெள்ளம் புகுந்து உள்ளது.

மேலும், அப்பகுதியில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட மலைக்காய்கறிகள் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்தது. கனமழை பெய்ததால் விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் கால்வாயில் அதிகளவில் படிந்து உள்ளது. இதனால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, 50 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், அடித்தும் செல்லப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கேத்தி பாலாடாவில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதனால் சாலையில் மண் மற்றும் பாறைகள் கிடக்கிறது. மேலும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஊட்டி-குன்னூர் சாலை வேலிவியூ பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. அதனால் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இருந்தாலும், மழையில் குடைபிடித்தபடி அவர்கள் பூங்காவை கண்டு ரசித்தனர்.

தொடர் மழை பெய்ததால் ஊட்டி படகு இல்லத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வெட்டி அகற்றினர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் சோலூர்மட்டம் கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ், கட்டபெட்டு பாரதி நகரை சேர்ந்த சரவணன், சுண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார், கிளப்ரோடு பகுதியை சேர்ந்த பிரதீ‌‌ஷ், தவிட்டுமேடு கிராமத்தை சேர்ந்த சரசு ஆகியோரின் வீடுகளின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. சம்பவ இடங்களுக்கு சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து கோத்தகிரி தாசில்தார் மோகனா பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண தொகையை வழங்கினார்.

இதேபோல நேற்று அதிகாலை பெய்த பலத்த மழையால் கோத்தகிரி டானிங்டன் சாலையில் உள்ள சரவணகுமார் என்பவரது வீட்டின் மீது அருகே இருந்த மண்திட்டு சரிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டதுடன், வீட்டின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. கோத்தகிரியில் மட்டும் மொத்தம் 11 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் கோத்தகிரியில் உள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பிணி மீது தாக்குதல்; உறவினர்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே கர்ப்பிணியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. பெரியூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பெரியூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. உறுப்பினர்கள் சமநிலையில் ஆதரவு தெரிவித்ததால் வரவணை ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு
உறுப்பினர்கள் சமநிலையில் ஆதரவு தெரிவித்ததால் வரவணை ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
5. கறம்பக்குடி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் மோதல்; போலீஸ் தடியடி அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் போலீசாருடன் அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் தடியடி நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.