உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு


உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு
x
தினத்தந்தி 4 Dec 2019 11:00 PM GMT (Updated: 4 Dec 2019 7:18 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் 404 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 241 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியின் 24 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

இந்த தேர்தலை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முத்துக்கருப்பன், அழகேசன், அறிவழகன் விஜய், தி.மு.க. சார்பில் வக்கீல் பாஸ்கர், கதிர்வேல், காங்கிரஸ் சார்பில் ராஜாநசீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இந்துராஜ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் திராவிடமணி, சுரேஷ், தே.மு.தி.க. சார்பில் திருப்பதி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் சிவராசு பேசியதாவது:-

ஒத்துழைப்பு தரவேண்டும்

தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். புகார்கள் எதுவும் இருந்தால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். வேட்பு மனு தாக்கல் வருகிற 6-ந்ேததி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் படிவம் எண் 3, சுய உறுதி மொழிப்படிவம், நோட்டரி பப்ளிக் கடிதம் ஆகிய மூன்றையும் அவசியம் இணைக்க வேண்டும். வேட்பாளர், அவரை முன்மொழிபவர், வேட்பாளர் விரும்பும் மூவர் மட்டுமே உடன் செல்ல அனுமதிக்கப்படுவர். வேட்பு மனுக்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம். கட்சி சின்னங்களை விளம்பரம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தலையிட முடியாது

அப்போது தி.மு.க, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பங்கேற்றவர்கள் திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த கலெக்டர் அரசின் கொள்கை முடிவுகளில் நான் தலையிட முடியாது. மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த படி சிறப்பாக தேர்தலை நடத்துவது தான் எனது பணி. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

ஒரே கட்டமாக...

இதனை தொடர்ந்து அ.தி.மு.க, பாரதீய ஜனதா தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் திருச்சி மாவட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என எழுதிய மனுவில் கைெயழுத்திட்டு கலெக்டரிடம் கொடுத்தனர்.

Next Story