கரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது


கரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2019 3:45 AM IST (Updated: 5 Dec 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நொய்யல்,

கரூர் பஸ் நிலையத்திலிருந்து நேற்று காலை கொடுமுடிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடையில் பஸ்சை நிறுத்தி கொடுமுடிக்கு ஒருவர் டிக்கெட் எடுத்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர் பஸ் கண்டக்டர் அரவக்குறிச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த கோபிநாத் (33) என்பவரை தகாதவார்த்தைகளால் திட்டி கொண்டு வந்தார். இதையடுத்து அரசு பஸ் டிரைவர் கொடுமுடியை சேர்ந்த சசிக்குமார், புன்னம்சத்திரம் அருகே ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே பஸ்சை நிறுத்தி குடிபோதையில் இருந்த நபரை கீழே இறங்கி விட்டார்.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

இதனால் ஆத்திரமடைந்த அவர் சாலையோரத்தில் கிடந்த கல்லை எடுத்து அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் வீசி அதனை உடைத்தார். இதையடுத்து அரசு பஸ் டிரைவர் சசிக்குமார் மற்றும் கண்டக்டர் கோபிநாத் ஆகியோர் சேர்ந்து குடிபேதையில் இருந்தவரை பிடித்து பஸ்சில் ஏற்றி கொண்டு வந்து, வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து குடிபோதையில் இருந்த அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குடிபோதையில் இருந்து, பஸ் கண்ணாடியை உடைத்தவர், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வேட்டக்காட்டுப்பாறையை சேர்ந்த சரவணன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குப்பதிந்து, சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story