பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ்-அஜித்பவார் பேசி வந்தது எனக்கு தெரியும் - சரத்பவார் பரபரப்பு தகவல்
மராட்டியத்தில் பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் பேசி வந்தது தனக்கு தெரியும் என சரத்பவார் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில், சட்டசபை தேர்தலை தொடர்ந்து ஆட்சி அமையாமல் அரசியல் குழப்பம் நிலவிய போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அந்த நேரத்தில் ரகசியமாக காய் நகர்த்திய பாரதீய ஜனதா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும், அந்த கட்சியின் முக்கிய தலைவருமான அஜித்பவாரை ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தன் பக்கம் இழுத்து கடந்த மாதம் 23-ந் தேதி திடீரென ஆட்சி அமைத்தது.
தேசியவாத காங்கிரசை பிளவுப்படுத்திய பாரதீய ஜனதாவின் இந்த முயற்சிக்கு பலன் கிட்டாமல் போனது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருடன் வர மறுத்ததால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா ஆட்சியின் ஆயுள் 4 நாளில் முடிந்து போனது.
இதற்கிடையே பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு சரத்பவார் தான் அஜித்பவாரை பின்னால் இருந்து இயக்கியதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை சரத்பவார் திட்டவட்டமாக மறுத்தார்.
தற்போது மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. அஜித்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கு வந்து விட்டார். இந்த நிலையில், ஆட்சி அமைப்பதில் குழப்பம் நிலவிய நேரத்தில் பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும், அதை தான் நிராகரித்து விட்டதாகவும் சரத்பவார் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைவதற்காக தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் தொடர்பில் இருந்தது தனக்கு தெரியும் என சரத்பவார் தற்போது மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைவதற்காக தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது எனக்கு தெரியும். ஆனால் அஜித்பவார் அப்போது எடுத்த அரசியல் முடிவு எனக்கு தெரியும் என்ற யூகம் தவறானது.
இந்துத்வா கொள்கையை கடைப்பிடிக்கும் சிவசேனாவுடன் இணைவது குறித்து ஒருபோதும் நினைத்தது இல்லை. நாங்கள் பாரதீய ஜனதா, சிவசேனாவுக்கு எதிராக தான் போட்டியிட்டோம். சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதும் அஜித்பவார் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் அஜித்பவார் ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேருவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. தற்போதைய மகா விகாஷ் முன்னணி அரசாங்கம் கொள்கை அடிப்படையில் அல்லாமல் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு தனது 5 ஆண்டு காலத்தையும் பூர்த்தி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story