கோட்டக்குப்பம் அருகே, தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோட்டக்குப்பம் அருகே, தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Dec 2019 9:30 PM GMT (Updated: 5 Dec 2019 5:23 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார்சாவடி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மங்கலட்சுமி, வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

பின்னர் மாலையில் செல்வம் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ, பட்டப்பகலில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story