அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்பு மனுக்கள் பெறுதல் தொடர்பான பயிற்சி


அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்பு மனுக்கள் பெறுதல் தொடர்பான பயிற்சி
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 8:08 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்பு மனுக்கள் பெறுதல் தொடர்பான பயிற்சி கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்பு மனுக்கள் பெறுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேர்முக தேர்தல்கள் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று ( வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். 16-ந் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 18-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவோர் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வேட்பு மனுக்கள் வந்து குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்பு மனுதாக்கலின் போது வேட்பாளருடன் முன்மொழியும் நபர் ஒருவரும், வேட்பாளர் விரும்பும் மூன்று நபர்களும் உடன் வரலாம் என்றார்.

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலை நடத்த 14 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 269 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேட்பு மனுக்கள் வாங்கும் போது, செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வேட்பு மனுக்கள் படிவத்தில் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது குறித்து காட்சிப்படுத்துதல் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை கவனமாக பரிசீலனை செய்வது குறித்தும் அறிவுரைகளையும் வழங்கினார்.

கூட்டத்தில், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) ஜெயரான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ரகு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story