உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லையென்றால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் - பா.ஜனதா அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லையென்றால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் - பா.ஜனதா அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 6 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லையென்றால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

காரைக்கால், 

பாரதீய ஜனதா கட்சியின் காரைக்கால் மாவட்ட புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் காரைக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், தங்கவிக்ரமன், தேர்தல் அதிகாரி செல்வம், விவசாய அணி இளங்கோவன், மாநில செயலாளர் அருள் முருகன், முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட பா.ஜனதா புதிய தலைவராக துரை.சேனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் மாநில அளவில் காரைக்கால் உள்பட 5 மாவட்டத்திற்கான கட்சி தலைவர் தேர்தல் முடிந்துள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் போட வேண்டும் என்று தொடர்ந்து பா.ஜனதா போராடியது. அதன் விளைவாகதான் அரிசிக்கு பதிலாக பணம் போடுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே பொங்கல் பரிசாக அரிசி மற்றும் சர்க்கரை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவிப்பு வெளியிட்டு அம்மாநில மக்களை தமிழக அரசு குளிரூட்டியுள்ளது.

ஆனால் புதுச்சேரி அரசு அதைப்பற்றி சிந்திக்க கூட நேரமின்றி இருக்கிறது. எனவே தமிழகத்தை தொடர்ந்து சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் 2000 பொங்கல் ஊக்கத்தொகையாக அறிவிக்க வேண்டும். அத்துடன் இலவச பொருள் களையும் வழங்க முன்வரவேண்டும்.

மேலும் தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. எனவே சேதமடைந்த சாலைகளை பொதுப்பணித்துறை போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும்..

புதுச்சேரியில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த எங்களுடைய கட்சியின் வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்னும் 30 நாட்களுக்குள் புதுச்சேரி அரசு உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கவில்லையென்றால் புதுச்சேரி சட்ட சபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story