நளினி-முருகன் உண்ணாவிரதம் வாபஸ் - இளநீர் குடித்து முடித்துக்கொண்டனர்
வேலூர் ஜெயிலில் கருணைக்கொலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நளினியும், முருகனும் இளநீரை குடித்து அதனை கைவிட்டனர்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு மனுவை சிறைத்துறை மூலம் நளினி அனுப்பினார்.
தொடர்ந்து அவர் தங்களை வேறு ஜெயிலுக்கு மாற்ற வேண்டும். அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டும் எனக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சிறை அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
நளினி வைத்த அதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முருகன் ஆண்கள் ஜெயிலில் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து உண்ணாவிரதத்தில் இருந்த இருவரிடமும் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களின் உடல் நிலையை ஜெயில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். உடல்சோர்வு காரணமாக இருவருக்கும் 2 நாட்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்த முருகனிடம் இரவு, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நளினியை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு சம்மதித்தால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும், மேலும் நளினியிடம் பேசி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற செய்வதாகவும் முருகன் கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்று நளினியை சந்திக்க டி.ஐ.ஜி. அனுமதி அளித்தார். அதைத்தொடர்ந்து முருகன் இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று நளினி-முருகன் சந்திப்பு நடந்தது. வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் தலைமையிலான போலீசார் முருகனை பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். காலை 9.10 மணி முதல் 10.10 மணி வரை நடந்த இந்த சந்திப்பின்போது முருகன் உண்ணாவிரதத்தை கைவிடும்படி நளினியிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரும் காலை 10.30 மணியளவில் இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story