7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடைக்கு ‘சீல்’ வைப்பு


7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:15 PM GMT (Updated: 7 Dec 2019 6:25 PM GMT)

வேலூரில் வியாபாரியிடம் இருந்து 7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர்.

வேலூர்,

வேலூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும், அக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ், மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று வேலூர் சுண்ணாம்புகாரத்தெரு, மண்டிவீதி, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது சுண்ணாம்புகாரத்தெருவில் உள்ள வணிகவளாகத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், ஸ்பூன்கள், தட்டுகள் உள்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதிகாரிகள் அக்கடையின் வியாபாரி அதே வணிக வளாகத்தில் குடோனாக பயன்படுத்திய கடைகளையும் ஆய்வு செய்தனர். அங்கு பதுக்கி வைத்திருந்த 5½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வணிக வளாகத்தில் ஒரே வியாபாரியிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் அதனை பெற்று கடைகளில் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story