ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பலியான மற்றொரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது


ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பலியான மற்றொரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 8 Dec 2019 4:00 AM IST (Updated: 8 Dec 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பலியான மற்றொரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது.

வில்லியனூர்,

வில்லியனூர் புதுபேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22), தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் வினோத் (24). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நண்பர்களான இவர்கள் மேலும் 2 பேருடன் சேர்ந்து வில்லியனூர் அருகே திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றுக்கு சென்றனர். சமீபத்தில் பெய்த மழையால் அங்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

அப்போது கார்த்திக், வினோத் ஆகியோரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. இதைப் பார்த்ததும் அவர்களுடன் சென்று இருந்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்து வில்லியனூர் தீயணைப்பு படையினர் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல்கள் மீட்பு

எனவே கார்த்திக், வினோத் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது நாளாக அவர்களது உடல்கள் தேடப்பட்டன.

அப்போது சங்கராபரணி ஆற்றில் வளர்ந்து இருந்த ஆகாயத்தாமரை செடிகளுக்கிடையே சிக்கி கிடந்த கார்த்திக்கின் உடல் மீட்கப்பட்டது. வினோத்தின் உடலை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வினோத்தின் உடல் கிளிஞ்சிக்குப்பம் - கீழ் அகரகாரம் இடையே சங்கராபரணி ஆற்றின் கரையோரம் ஒதுங்கியது.

இதுபற்றி அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள் 2 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் வில்லியனூர் புதுபேட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story