திருமண விழாவில் ருசிகரம், புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்


திருமண விழாவில் ருசிகரம், புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-08T20:56:31+05:30)

திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் வெங்காய பொக்கேயை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கடலூர், 

வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. கடலூரில் நேற்று ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் சிறியது ரூ.120, நடுத்தரம் ரூ.140, பெரியது ரூ.180, சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இப்படி வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் கடலூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் வெங்காய பொக்கேயை பரிசாக அளித்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முஸ்லிம் ஜோடிக்கு நேற்று காலை திருமணம் நடந்தது. விழாவில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு புதுமண தம்பதிக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர். அப்போது மணமக்களை வாழ்த்த வந்த அவர்களின் நண்பர்கள் சிலர் புதுமண தம்பதிக்கு வெங்காய பொக்கே பரிசாக வழங்கினர். அதை மணமக்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர். மணமக்களுக்கு வெங்காய பொக்கேயை வழங்கியதை, விழாவுக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

பின்னர் புதுமண தம்பதியரின் நண்பர்கள் கூறும்போது, மணமக்களுக்கு பழபொக்கே வழங்கலாம் என்று அவற்றை வாங்க மார்க்கெட்டுக்கு சென்றோம். அப்போது பழத்தின் விலையை விட வெங்காயத்தின் விலை அதிகமாக இருந்ததை அறிந்து, பழத்துக்கு பதிலாக வெங்காய பொக்கேயை தயார் செய்தோம். வெங்காயத்தின் விலை எந்த அளவுக்கு உச்சகட்டத்துக்கு சென்று இருக்கிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், புதுமண தம்பதிக்கு வெங்காய பொக்கேயை வழங்கினோம் என்றனர்.

Next Story