விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் வருகிற 14-ந்தேதி பேரணி சஞ்சய்தத் பேட்டி


விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் வருகிற 14-ந்தேதி பேரணி சஞ்சய்தத் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-08T22:47:55+05:30)

விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் வருகிற 14-ந்தேதி சோனியா காந்தி தலைமையில் பேரணி நடைபெற இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

திருச்சி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. இந்திய பொருளாதாரம் கடலில் மூழ்கும் கப்பலை போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கப்பலின் கேப்டனாக மோடி இருக்கிறார். தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸமார்ட் சிட்டி உள்ளிட்ட மோடியின் அனைத்து திட்டங்களும் தோல்வியை தான் தழுவி உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை எல்லா நாடுகளிலும் குறைந்து கொண்டிருக்கும்போது இந்தியாவில் மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் மீது வரிக்கு மேல் வரி போடுவது தான். வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. விலைவாசி உயர்வு ஏழை மக்களின் முதுகெலும்பை உடைப்பதாக உள்ளது.

பொருளாதார வீழ்ச்சியையும், விலைவாசி உயர்வையும் கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் வருகிற 14-ந்தேதி சோனியா காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் ராகுல்காந்தியும் பங்கேற்பார். இந்த பேரணி மோடி அரசை ஆட்டம் காண வைக்கும்.

வேளாண் பொருட்கள் உற்பத்தி இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீதம் ஆக இருந்தது தற்போது 2.1 சதவீதத்திற்கு போய் விட்டது. நட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாக சரிந்து விட்டது. வேலையின்மை பிரச்சினை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8 சதவீதமாக உயர்ந்து விட்டது.

2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரியால் பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு 40 லட்சம் பேர் ேவலை இழந்து தவிக்கிறார்கள். வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வரப்படவில்லை.வருவாய் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் நல திட்டங்களை கூட நிைறவேற்ற முடியாமல் மத்திய அரசு தவித்துக்கொண்டிருக்கிறது. பொருளாதார தேக்கத்தில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 102 -வது இடத்திற்கு சென்று விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ், மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜ், திருச்சி கலை உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story