திருமக்கோட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தின் கரை உடைந்தது போக்குவரத்து துண்டிப்பு


திருமக்கோட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தின் கரை உடைந்தது போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 7:21 PM GMT)

திருமக்கோட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தின் கரை உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருமக்கோட்டை,

திருமக்கோட்டையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தெற்குதென்பரை உள்ளது. தென்பரைக்கும், பாலையூர் கிராமத்திற்கும் இடையில் மிகவும் பழமை வாய்ந்த பாமணி ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் சிறிய நான்கு சக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியும். இந்த பாலத்தின் பக்க சுவர்களின் கைப்பிடிகள் இடிந்து ஆபத்தாக இருந்து வந்தது.

இதனை சீரமைக்க வேண்டும் என்று “தினத்தந்தி’’ நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமானது.

போக்குவரத்து துண்டிப்பு

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பாமணி ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்கின்ற காரணத்தினாலும் பாலத்தின் கீழ்பக்கத்தின் கரை உடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு தென்பரை, பாலையக்கோட்டை, புதுக்குடி, சமுதாயம் கோவிந்தநத்தம், வல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வடக்கு தென்பரையில் உள்ள தோணித்துறை வழியாக 5 கி.மீ. சுற்றி செல்ல வேண்டியுள்ளது. தற்போது மணல் மூட்டை அடுக்கி கரையை சீரமைக்கும் பணியில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரை உடைந்துள்ள பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story