ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-09T01:22:07+05:30)

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என வணிகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம்,

குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பேரமைப்பு மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழா மகேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரமே‌‌ஷ்ராஜா மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சரக்கு சேவை வரியை உயர்த்துவது வணிகர்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பொருளாதார தேக்க நிலையாக உள்ள இந்த நேரத்தில் வரி உயர்வு அறிவிப்பால் விலைவாசி உயரும். எனவே சரக்கு சேவை வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வணிகத்தால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதித்து பொருளாதாரம் சீர்குலைகிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17-ந்தேதி கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக வாய்ப்பு உள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்தார். அதனடிப்படையில் காலதாமதம் செய்யாமல் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

Next Story