பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார பாதையை நோக்கி நாடு போய் கொண்டிருக்கிறது - ப.சிதம்பரம் பேட்டி


பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார பாதையை நோக்கி நாடு போய் கொண்டிருக்கிறது - ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 8:34 PM GMT)

பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார பாதையை நோக்கி நாடு போய் கொண்டிருக்கிறது என ப.சிதம்பரம் கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பின் நேற்று காரைக்குடிக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

காரைக்குடி,

தற்போது நடப்பது மக்களுக்கும், பா.ஜ.க.வுக்குமான தர்மயுத்தம். பா.ஜ.க. அரசு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லாமல் பொருளாதாரத்தை சிதைக்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறது.

நாட்டில் சமூக அநீதி, வன்கொடுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் அமைதி இல்லை. இதனை எதிர்த்து பேசினால், எழுதினால் தேச விரோதிகள் என நடவடிக்கை பாய்கிறது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. பெரும் முதலாளிகளில் இருந்து சாதாரண தொழிலாளிகள் வரை இந்த அச்சம் நிலவுகிறது. தனி மனித சுதந்திரம் என்பதே தற்போது இல்லை. நாட்டில் குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. நாடு சர்வாதிகார பாதையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனம் கொடுத்த அதிகாரங்களை நேர்மையோடும், துணிவோடும் அதிகார மையங்கள் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைத்தோங்கும்.

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி நிதி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து அவரது கருத்தை கூறியுள்ளார். சில நேரங்களில் அவரது கருத்துகள் சரியாகவும் இருக்கும். வேலையில்லா திண்டாட்டம், தவறான பொருளாதார கொள்கை, விலைவாசி உயர்வு, மனித உரிமைகள் பறிப்பு இவையே இன்றைய நிலையாக உள்ளது. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சி துணை நின்று போராடும். இதற்காக டிசம்பர் 14-ல் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. நிர்பயா நிகழ்வுக்கு பின் பெண்களின் பாதுகாப்பிற்காக ரூ. 3500 கோடி நான் பொறுப்பில் இருந்தபோது ஒதுக்கீடு செய்து கொடுத்தேன். ஆனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அவற்றை பயன்படுத்தவே இல்லை.

தற்போது மீண்டும் நிதி திரட்ட முயற்சித்து வருகிறது. அதனால் மீண்டும் ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட உள்ளது. இதனால் பொருளாதார சிதைவு அதிகரிக்கும். பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். இளைஞர்கள் நல்ல மாற்றத்திற்காக சிந்தித்து செயல்பட வேண்டும்.

தமிழக உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புக்களில் விதிமீறல்கள் உள்ளதாக தி.மு.க. கருதுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞர் பிரிவும் இதுகுறித்து பரிசீலனை செய்து வருகின்றனர். விரைவில் இதுபற்றி அறிவிப்பர். நாட்டின் நிலைமைகள் குறித்து நான் எழுதும் கட்டுரைகள் 10 மொழிகளில் வெளிவர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார் .

பின் தங்களுக்கு சிறையில் உரிய வசதிகள் அளிக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ப.சிதம்பரம், குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா.... என்ற பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

பேட்டியின்போது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே. ஆர்.ராமசாமி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக காரைக்குடி வந்த ப.சிதம்பரத்திற்கு பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ரமேஷ், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன் மற்றும் காங்கிரஸ் அமைப்புகளின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Next Story