தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது - ஒரே நாளில் 113 பேர் மனுதாக்கல்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது - ஒரே நாளில் 113 பேர் மனுதாக்கல்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-09T22:46:42+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 113 பேர் மனுதாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. மாவட்டத்தில் 12 பஞ்சாயத்து யூனியனில் உள்ள 174 வார்டு உறுப்பினர், 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 403 பஞ்சாயத்து தலைவர், 2 ஆயிரத்து 943 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 1,542 பதவிகளுக்கும், 2-வது கட்டமாக 1,995 பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கை ஒட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேட்பு மனுதாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகளுக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலரும் வேட்புமனுக்களை பெற்றனர். நேற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 103 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுதாக்கல் வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த வேட்பு மனுதாக்கல் பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பஞ்சாயத்து யூனியன்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டு உள்ளன. மாநில தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் ஊரக பகுதிகளில் ஏற்கனவே அமலுக்கு வந்து உள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நகரப்பகுதிகளில் பொருந்தாது. மேலும் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஊரக பகுதியில் நடைபெறும் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்குச்சாவடி பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்தலில் மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 12 யூனியன்களில் உள்ள பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியநிலா (ஆழ்வார்திருநகரி), சுப்பிரமணியன் (ஸ்ரீவைகுண்டம்), சுடலை (தூத்துக்குடி), ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story