பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், தலைவர் பதவிக்கு 38 பேர் வேட்பு மனு தாக்கல்


பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், தலைவர் பதவிக்கு 38 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 5:48 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சி தலைவர்கள், 121 கிராம ஊராட்சிகளில் உள்ள 1,032 வார்டு உறுப்பினர்கள், 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 76 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் என ஊரக பகுதிகளில் காலியாக உள்ள மொத்தம் 1,237 பதவியிடங்களுக்கும் நேர்முக தேர்தல் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டாக பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதியும், 2-ம் கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல்

இந்த நிலையில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு வேட்பு மனு தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், இதேபோல் கிராம ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலங்களிலும் நடைபெற்றது. இதனால் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குவிக்கப்பட்டனர்.

மேலும் அந்த அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று முதல் நாள் என்பதால் பலர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். இன்னும் அரசியல் கட்சியினர் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால், அந்த பதவிகளுக்கு சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் மட்டும் நேற்று வேட்பு மனுவினை வாங்கி சென்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கூட்டமின்றி காணப்பட்டது. வேட்பு மனுக்களை வாங்கி சென்றவர்கள், பணம் கொடுத்து வாக்காளர் பட்டியல் புத்தகத்தையும் வாங்கி சென்றனர்.

38 பேர்

இதே போல் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 பேரும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 2 பேரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பேரும் என மொத்தம் 36 பேர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புஜராயங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்த போது வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவரும், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் யாரும் கிராம ஊராட்சி தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதே போல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கும் யாருமே வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

Next Story