மதுவாங்க பணம் கேட்ட தகராறில் முதியவர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மதுவாங்க பணம் கேட்ட தகராறில் முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெற்றி நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (63). இருவரும் அங்கு உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இதனால் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
இந்த நிலையில் 2 பேரும் கடந்த 11.2.2016 அன்று அங்குள்ள ஒரு மதுபான கடையில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலும் மதுவாங்க வேண்டும் என்று கவுரிசங்கர், ஜெகநாதனிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர் அந்த பகுதியில் கிடந்த கட்டையை எடுத்து ஜெகநாதனை தாக்கி உள்ளார். இதில் உடலில் பல இடங்களில் பலத்த காயம் அடைந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த தொழிலாளி கவுரிசங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story