தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் திருவண்ணாமலை நகரம் - 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நகரின் மையப் பகுதியில் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதிகாலை சுமார் 4 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் மற்றும் பரணி தீபத்தை காண்பதற்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு நேற்றே வர தொடங்கினர். இன்று மகா தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலை நகரத்திற்கு சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை நகரத்தில் கிரிவலப்பாதை, கோவில் மாட வீதி, தற்காலிக பஸ் நிலையங்கள், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகரில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் பார்வையிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வரும் 9 இணைப்பு சாலைகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம், பஸ் நிலையம், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தினர். கோவில் அருகில், ஈசான்ய மைதானம், மாட வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதியில் தீயணைப்பு துறையினரின் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
108 ஆம்புலன்ஸ்களும், மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் போன்றவை நேற்று முதல் தயார் நிலையில் திருவண்ணாமலை நகரத்தில் முக்கிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களின் வசதிக்காக 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் திருவண்ணாமலை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story