பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-10T01:02:11+05:30)

பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை அமைப்பதற்காக மண் கொட்டப்பட்டு தரை சமப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ஐ.ஜி. ஆய்வு

அவர்கள் எந்தவித சிரமும் இன்றி கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக என்னென்ன பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் பெரியகோவிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் நிறுத்தப்படும் சிவகங்கை பூங்கா, யாகசாலை நடைபெறும் பெத்தண்ணன் கலையரங்கம், கோவில் பின்புறம் உள்ள நந்தவனம், பெரியகோவில் வளாகம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவிலுக்குள் பக்தர்களை எந்த வழியாக அனுமதிக்க வேண்டும். எந்த வழியாக அவர்களை வெளியே அனுப்ப வேண்டும். எந்தந்த பகுதிகளில் பக்தர்கள் நிற்க வேண்டும் என்பது குறித்து வரைபடத்துடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போலீஸ் டி.ஐ.ஜி. லோக நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிப்ரவரி 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு பணிகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பக்தர்களை எந்த வழியாக கோவிலுக்குள் அனுப்ப வேண்டும். கும்பாபிஷேகம் பார்க்க எந்த இடத்தில் அவர்களை நிற்க வைக்க வேண்டும். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் எந்த வழியாக வெளியே அனுப்ப வேண்டும் என பார்த்து வருகிறோம்.

கோவிலுக்குள் எவ்வளவு பேரை அனுமதிக்கலாம். வெளியே எந்தந்த இடங்களில் பக்தர்களை நிறுத்தலாம் என முதல்கட்டமாக வரைபடம் போட்டு பார்த்து வருகிறோம். இதில் குறை பாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பணியையும் செய்வோம். கோவிலைவிட வெளியே தான் பரப்பளவு அதிகமாக இருக்கிறது. அதனால் அங்கே நிறுத்தலாம். அவர்களை எப்படி அனுமதிப்பது என்பது குறித்து ஆய்வு செய்கிறோம் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சீரமைப்பு பணி

தஞ்சை பெரியகோவில் உள்ளே 10 இடங்களில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை பார்க்க தடுப்பு கட்டைகள் அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை பூங்காவில் உள்ள கழிவறைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செடி, கொடிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெத்தண்ணன் கலையரங்கத்தின் எதிரே பழைய கட்டிட வளாகத்தில் கழிவறை அமைப்பதற்காக தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோவில் தரைதளத்தில் உடைந்த செங்கற்களை அகற்றிவிட்டு புதிய செங்கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.

Next Story