சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது


சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-10T01:07:59+05:30)

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,473 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்,

காவிரிடெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடியும், 30 ஆயிரம் எக்டேரில் தாளடியும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆறுகளில் தண்ணீர் செல்வதுடன் அவ்வப்போது மழையும் பெய்வதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

உரம் இருப்பு

பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் கொண்டு வரப்படும்.

அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலின் 36 வேகன்களில் 2,101 டன் யூரியாவும், 6 வேகன்களில் 372 டன் காம்ப்ளக்ஸ் உரமும் என மொத்தம் 2,473 டன் உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த உரமூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story