தொழில் அதிபரிடம் ரூ.6¼ லட்சம் மோசடி: முன்னாள் கவுன்சிலருக்கு 3 ஆண்டு ஜெயில்


தொழில் அதிபரிடம் ரூ.6¼ லட்சம் மோசடி: முன்னாள் கவுன்சிலருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 8:49 PM GMT)

தொழில் அதிபரிடம் ரூ..6¼ லட்சம் மோசடி செய்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பயோனியர் கம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, தொழில் அதிபர். இவருக்கு கன்னியாகுமரி, வெட்டூர்ணிமடம் ஆகிய பகுதிகளில் சொந்தமாக பெட்ரோல் பங்க் இருந்தது. கடந்த 2005-ம் ஆண்டு இந்த பெட்ரோல் பங்கில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து நகரை சேர்ந்த மோகன் (வயது 46) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஆவார்.

ரூ.6¼ லட்சம் மோசடி

இந்தநிலையில் தொழில் அதிபர் ராமசாமி கையெழுத்து போட்டு வைத்திருந்த காசோலையை மோகன் எடுத்து ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்தை நிரப்பி உள்ளார். பின்னர் அந்த காசோலைைய வங்கியில் கொடுத்து அவரது நண்பர் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இதையடுத்து ராமசாமி அவரது வங்கி கணக்கை பார்க்கும் போது ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் மோகன், பெட்ரோல் நிரப்புவதில் ரூ.52 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக ராமசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மோகனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை என அந்த உத்தரவில் கூறினார்.

Next Story